Madras Times - தி.மு.க. முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷின் ஜாமின் மனு தள்ளுபடி

தி.மு.க. முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷின் ஜாமின் மனு தள்ளுபடி
தி.மு.க. முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷின் ஜாமின் மனு தள்ளுபடி

தி.மு.க. முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷின் ஜாமின் மனு தள்ளுபடி

தனியார் பள்ளிகளிடம் லஞ்சம் பெற்றதாக தொடரப்பட்ட வழக்கில், தி.மு.க. முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் சிறையில் இருந்து வெளியே வரும் வாய்ப்பு இல்லை என சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விசாரணையின் ஆரம்ப கட்டத்தில் இருப்பதால், ஜாமின் வழங்குவது பொது நலனுக்கு எதிரானது எனக் கூறி, அவரது ஜாமின் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.

Tamaño del texto:

தனியார் பள்ளிகளிடம் லஞ்சம் பெற்றதாக தொடரப்பட்ட வழக்கில், தி.மு.க. முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் சிறையில் இருந்து வெளியே வரும் வாய்ப்பு இல்லை என சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விசாரணையின் ஆரம்ப கட்டத்தில் இருப்பதால், ஜாமின் வழங்குவது பொது நலனுக்கு எதிரானது எனக் கூறி, அவரது ஜாமின் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.

கடந்த தி.மு.க. ஆட்சியின் போது, அனுமதியின்றி கட்டப்பட்ட தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்குவது, பள்ளிகளைத் தரம் உயர்த்துவது மற்றும் கட்டட அனுமதி வழங்குவது உள்ளிட்டவற்றுக்கு, 170-க்கும் மேற்பட்ட பள்ளிகளிடமிருந்து 400 கோடி ரூபாய் வரை லஞ்சம் பெற்றதாக புகார்கள் எழுந்தன. இதுகுறித்து, தனியார் பள்ளி நிர்வாகிகள் சங்கத்தின் செயலர் இளங்கோவன் அளித்த புகாரின் அடிப்படையில், சங்கத்தின் தலைவர் பி.டி. அரசுக்குமார், முன்னாள் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ. முத்துக்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில், வழக்கில் கைதாகி சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அன்பில் மகேஷ், ஜாமின் கோரி கடந்த 27-ம் தேதி மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு, ஊழல் தடுப்புச் சட்ட வழக்குகளை விசாரிக்கும் சென்னை சிறப்பு நீதிமன்ற நீதிபதி எல்.எஸ். சத்தியமூர்த்தி முன், கடந்த 6-ம் தேதி விசாரணைக்கு வந்தது.

விசாரணையின் போது, அரசு தரப்பில் 'மகேஷிடம் நடத்திய மூன்று நாள் விசாரணையில் புதிய ஆதாரங்கள் கிடைத்துள்ளன. எனவே, அது குறித்து முத்துக்குமாரைக் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டியுள்ளது' எனத் தெரிவிக்கப்பட்டது. மேலும், 'வழக்கில் தொடர்புடைய கார் டிரைவர் சரவணன் உள்ளிட்டோர் தலைமறைவாக இருப்பதால், மகேஷுக்கு ஜாமின் வழங்கக்கூடாது' என எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, நீதிபதி வழக்கை 10-ம் தேதிக்குத் தள்ளி வைத்திருந்தார்.

அதன்படி, இவ்வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, நீதிபதி பிறப்பித்த உத்தரவில், 'தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க லஞ்சம் பெற்றதாக தொடரப்பட்ட இந்த வழக்கு, பல கோடி ரூபாய் தொடர்புடைய தீவிரமான பொருளாதார குற்றமாகும்' எனக் குறிப்பிடப்பட்டது. மோசடி குறித்து பள்ளி நிர்வாகிகள் மற்றும் தாளாளர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர். அவை, அன்பில் மகேஷை இவ்வழக்கின் குற்றத்துடன் தொடர்புபடுத்துவதற்குப் போதுமான முதற்கட்ட ஆதாரங்களாக உள்ளன.

மேலும், தனியார் பள்ளிகளை மிரட்டி வசூலிக்கப்பட்ட பணம், கட்சி நிதி என்ற பெயரில் முன்னாள் அமைச்சர் மகேஷிடம் வழங்கியதற்கான சாட்சிகளின் வாக்குமூலங்களும் கிடைத்துள்ளன. இதன் அடிப்படையில், முதல் தகவல் அறிக்கையில் உள்ள குற்றச்சாட்டு மற்றும் தற்போது கிடைத்துள்ள ஆதாரங்களுடன் ஒப்பிடும்போது, இவ்வழக்கை மிகப்பெரிய பொருளாதார குற்றத்துடன் வகைப்படுத்த முடிகிறது.

விசாரணையின் போது கைப்பற்றப்பட்ட 'டிஜிட்டல்' சாதனங்கள் தடயவியல் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளன. அவற்றின் முடிவுகள் வெளியாகவில்லை. சைபர் நிபுணர்களின் ஆய்வு முடிவுகள் கிடைக்கும் வரை காத்திருக்க வேண்டும் என நீதிபதி குறிப்பிட்டார்.

இவ்வழக்கில் கைதான முதல் குற்றவாளி அரசுக்குமார் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. முத்துக்குமாரும் சரணடைந்துள்ளார். அவரிடமும் போலீஸ் தரப்பில் விசாரிக்க வேண்டியுள்ளது. இன்னும் சிலர் தலைமறைவாக உள்ளனர். இவை அனைத்தையும் கருத்தில் கொள்ள வேண்டியது அவசியம். மகேஷ் செல்வாக்கு மிக்க அரசியல்வாதி என்பதால், அவருக்கு ஜாமின் வழங்கினால், விசாரணையில் தாமதம் ஏற்படவும், சாட்சிகள் மற்றும் ஆதாரங்களைக் கலைக்கவும் வாய்ப்பு உள்ளது.

எனவே, 'இவ்வழக்கு விசாரணையின் ஆரம்பகட்ட நிலை, பள்ளி மாணவர்களின் கல்வி நலன் மற்றும் பொது நலனை விட, அன்பில் மகேஷின் தனிப்பட்ட ஜாமின் மனு மேலானது அல்ல' எனக் கூறி, நீதிபதி ஜாமின் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.

தீபாவளி பண்டிகைக்கு சிறையில் இருந்த மகேஷ், தனக்கு எப்படியும் ஜாமின் கிடைத்துவிடும் என நம்பினார். ஆனால், ஜாமின் மனு தள்ளுபடியானதால், அதிர்ச்சி அடைந்துள்ளார். சிறையில் முதல் வகுப்பு அறை ஒதுக்கப்பட்டிருந்தாலும், கொசுக்கடி அவரைச் சிரமப்படுத்துகிறது. புத்தகம் படிப்பதில் அதிக நேரத்தைச் செலவிட்டு வருகிறார். அவருக்கு உடல்நிலை பிரச்சினை இருப்பதால், அவர் கேட்கும் உணவு வகைகள் வழங்கப்படுகின்றன.

அவரைப் பார்க்க கட்சியினர் வந்தாலும், சிறை அதிகாரி உத்தரவின்படி, தினமும் மூன்று வழக்கறிஞர்கள் மற்றும் இரண்டு உறவினர்கள் மட்டும் பார்க்க அனுமதிக்கப்படுகின்றனர் எனத் தி.மு.க.வினர் தெரிவித்தனர்.

தனியார் பள்ளிகளுக்கு அரசு அங்கீகாரம் வழங்க, 400 கோடி ரூபாய்க்கு மேல் லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைதாகி உள்ள அன்பில் மகேஷுடன், மேலும் 12 பேர் கூட்டு சேர்ந்து செயல்பட்டு இருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. எங்களை மீறி அரசு அங்கீகாரம் பெற முடியாது என, தனியார் பள்ளி நிர்வாகிகளை மிரட்டி, குடும்ப உறுப்பினர்கள், அறக்கட்டளை மற்றும் வணிக வங்கி கணக்குகள், பினாமிகள் பெயரில் உள்ள வங்கி கணக்குகள் வாயிலாக, அரசுக்குமார் உள்ளிட்டோர் பணம் வசூலித்துள்ளனர். இந்தப் பணத்தை நிலம், வீடு, வணிகத்தில் முதலீடு செய்துள்ளனர்.

அரசுக்குமாரின் நடத்தை குறித்து விசாரித்தபோது, மிகவும் அதிர்ச்சியான தகவல்கள் கிடைத்துள்ளன. அவர் மீது புதுக்கோட்டை மாவட்டக் குற்றப்பிரிவில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்துள்ளது. சில தனியார் பள்ளி நிர்வாகிகளிடம், 'என்னை மீறி உங்களால் எதுவும் செய்ய முடியாது' என மிரட்டியே பணம் வசூலித்துள்ளார்.

தொடர் விசாரணையில், அரசுக்குமார், அன்பில் மகேஷ் உள்ளிட்டோருடன் சேர்ந்து, பதிவு செய்யப்படாத தனியார் பள்ளிகள் சங்கத்தின் பொருளாளர் ஸ்ரீதர், விழுப்புரம் மாவட்ட தனியார் பள்ளி நிர்வாகி பழனியப்பன், நாமக்கல் மாவட்ட தனியார் பள்ளி நிர்வாகி சந்திரசேகரன், அரசுக்குமாரின் நெருங்கிய கூட்டாளியான தினேஷ், இன்ஸ்டின், திருநெல்வேலியைச் சேர்ந்த சுப்பையா, சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த சுபா என்ற சுப்பிரமணியம், திருவாரூர் சுசீந்திரன், தெய்வசிகாமணி, சென்னியப்பன், ஜனகரத்தினம், பேங்க் சுப்பிரமணி என்ற நபர்களுக்கும் இந்த லஞ்ச விவகாரத்தில் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. அவர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்து தேடி வருகிறோம் எனப் போலீசார் கூறினர்.

தி.மு.க. வழக்கறிஞர் சரவணன் அளித்த பேட்டியில், 'முன்னாள் அமைச்சர் மகேஷின் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளோம்' எனத் தெரிவித்தார். ஏற்கனவே, அவரது முன்ஜாமின் தள்ளுபடி செய்யப்பட்டது. அதற்கு 'மகேஷைக் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும். முத்துக்குமார் சரணடையாமல் உள்ளார்' என அரசு தரப்பு காரணம் தெரிவித்தது.

தற்போது முத்துக்குமாரும் சரணடைந்து விட்டார். மகேஷிடமும் போலீஸ் விசாரணை முடிந்து விட்டது. இருப்பினும், லஞ்சம் கொடுத்தவர்களைச் சாட்சிகளாக வைத்து, சிறப்பு நீதிமன்றம் மகேஷின் ஜாமின் மனுவைத் தள்ளுபடி செய்துள்ளது. முத்துக்குமார் சரணடைந்து 10 நாட்களுக்கு மேலாகிறது. ஆனால், போலீசார் அவரைக் காவலில் எடுத்து விசாரிக்காமல் காலதாமதம் செய்து வருகின்றனர் என அவர் குற்றம்சாட்டினார்.

X.Ranganathan--MT